|
Star
of the week 13/13 |
Anjali |
|
அஞ்சலியின் மறுபக்கம் - மினி சினி தொடர்: பகுதி 5 - Vikatan.com, 15 April 2013
’’அஞ்சலிக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை. சினிமா கால்ஷீட் உள்ளிட்ட அவர்சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் அவரது அம்மாவிடம் ஒப்படைத்து விட்டேன். வழக்குகளை வாபஸ் வாங்குவது குறித்து நான், எனது அக்கா, அஞ்சலி எல்லோரும் கலந்து பேசி ஒரு முடிவெடுப்போம்’’ - இப்படிச் சொல்லி இருக்கிறார் அஞ்சலியின் சித்தி பாரதி தேவி.
|
Vikatan.com |
|
|
|
|
|
‘’நான் யார் மீதும் குறைகூற விரும்பவில்லை. இனி, என்னைப் பற்றிய விஷயங்களை நானே கவனித்துக் கொள்வேன். இனி, என்னை மையப்படுத்தி எது நடந்தாலும் அது என்னைச் சேர்ந்தது” - இப்படிச் சொல்லி இருக்கிறார் அஞ்சலி. |
|
கடந்த வாரத்தில் இரண்டு தரப்பிலும் இருந்த கோபமும் கொந்தளிப்பும் இப் போது இல்லை. ’குடும்பப் பிரச்னையை வீதிக்கு கொண்டு வராதீர்கள்” என்று இரண்டு தரப்பையுமே யாரோ பக்குவப்படுத்தி இருக்கிறார்கள். அதனால் தான் இந்த மாற்றம். கத்தாரில் இருக்கும் அஞ்சலியின் அம்மா பார்வதி தேவி, மிக விரைவில் சென்னைக்கு வருகிறார். இதையடுத்து, அஞ்சலிக்கும் அவரது சித்திக்குமான உரசல் முடிவுக்கு வருவதற்கான முகாந்திரம் உருவாகிக் கொண்டிருக்கிறது. ’’இனி, மீடியாக்கள் மத்தியில் தோன்றினாலும், பெரிதாக யார் மீதும் பழிபோட்டு பேசமாட்டார் அஞ்சலி. ‘அனைத்தையும் ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்துவிட்டேன்” என்று மட்டும் அவர் சொல்லக் கூடும்” என்கிறார்கள் விவரமறிந்த சினிமா புள்ளிகள்.
இனி அஞ்சலியின் மறுபக்கம்...
தன்னை ஸ்டாராக்கிய சித்திக்காக அத்தனையையும் பொறுத்துக் கொண்டிருந்த அஞ்சலி, பொங்கி வெடித்தது யாருடைய தைரியத்தில்? ’சீத்தாம்மா வாகித்லோ ஸ்ரீமல்லே சேத்து” தெலுங்கில் அஞ்சலி நடித்து சக்கைப் போடு போட்ட படம். இந்தப் படத்தில் ரேவதி, ரோகிணி மாதிரியான குணசித்திர வேடம் தான் அஞ்சலிக்கு. இவருக்கு ஜோடி வெங்கடேஷ். ஹீரோ மகேஷ்பாபுவுக்கு அண்ணியாக நடித்தார் அஞ்சலி. சூப்பர் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருந்த வெங்கடேஷுக்கு அண்மைக்காலமாக அடுத்தடுத்து படங்கள் ஊத்திக் கொண்டன. அதற்கு காரணம் அவரது உடல் வாகு என்கிறார்கள்.
மனுஷன் அநியாயத்துக்கு வெயிட் போட்டுவிட்டதால் இளம் ஹீரோயின்கள் தமன்னா, சமந்தா உள்ளிடவர்கள் வெங்கடேஷ் படம் என்றாலே தலைதெரிக்க ஓடுகிறார்கள். இப்படியான சூழலில், வெங்கடேஷுக்கு ஜோடியாக சீத்தாம்மா வாகித்லோ ஸ்ரீமல்லே சேத்துவில் நடிக்க சம்மதிக்கிறார் அஞ்சலி. இந்தப் படத்திற்காக அஞ்சலிக்கு பேசப்பட்ட சம்பளம் 40 லட்சம். படப்பிடிப்பு தளத்தில் அஞ்சலி நடந்து கொண்ட விதம் வெங்கடேஷுக்கு ரொம்பவே பிடித்துப் போனது. அதுவுமில்லாமல், தொடர்ந்து தோல்வி முகத்தில் போய்க்கொண்டிருந்த தன்னுடைய சினிமா வாழ்க்கையில், சீத்தாம்மா படம் ஒரு பிரேக்கை கொடுத்ததும் அஞ்சலியை வாயாற புகழ ஆரம்பித்தார் வெங் கடேஷ்.
இதனால், தன்னுடைய அடுத்த படமான ஹிந்தி ரிமேக் ‘போல் பச்சனிலும்” அஞ்சலிக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இதில் அஞ்சலியின் சம்பளம் 60 லட்சம் என்கிறார்கள். இரண்டு படங்களில் சேர்ந்து நடித்த அனுபவம் அஞ்சலிக்கும் வெங்கடேஷிற்கும் இடையில் இழையோடிய நட்பை பலப் படுத்தியது. இருவரும் அடிக்கடி தொடர்பு கொண்டு தங்களது கஷ்ட நஷ் டங்களை பகிர்ந்து கொண்டார்கள். இதற்கு முன்பு, மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி தயாரிப்பில் வெளிவந்த ’தூங்கா நகரம்’படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, அஞ்சலிக்கு ஒரு பிரச்னை. அவரை தன் கட்டுப் பாட்டிலேயே வைத்திருக்க துடித்த ஒரு இயக்குநர், தொடர்ந்து பல வழிகளில் டார்ச்சர் கொடுத்தார். இதனால் மூடவுட்டாகிப் போய் உட்கார்ந்திருந்தார் அஞ்சலி.
தூங்கா நகரம் யூனிட்டில் இந்த விஷயம் காட்டுத் தீயாய் பரவியது. துரை தயாநிதியின் படக் கம்பெனியை அழகிரியின் மருமகன் வெங்கடேஷ் தான் கவனிக்கிறார். அவருக்கு இந்த விஷயம் போய், நேரடியாக அஞ்சலியை அழைத்து விசாரித்தார். அந்த இயக்குனரின் டார்ச்சரை சொல்லி புலம்பிய அஞ்சலி, ‘இது என்னுடைய பர்சனல். நானே பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் சீரியஸாக்கி விடாதீர்கள்” என்று சொன்னாராம். ஆனாலும், வெங்கடேஷ் தரப் பிலிருந்து அந்த இயக்குனரை கூப்பிட்டு ’அன்பாக” கண்டித்து விட்டார்களாம். கொஞ்ச நாட்கள் அமைதி. பிறகு, மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது.
அஞ்சலி மீது அளவு கடந்த கவனிப்பு வைத்திருந்த அந்த இயக்குனர், தன்னை மீடியாக்காரர்கள் யாராவது சந்திக்க வந்தால், ‘அஞ்சலி தான் என்னோட படத்துல ஹீரோயின். அவங்கள பேட்டி எடுத்து ஃப்ளாஷ் பண்ணுங்க பாஸ்” என்று அஞ்சலிக்கு விளம்பர வெளிச்சம் தேடினார். ஆனால், அவரின் இந்த சிபாரிசுகளை எல்லாம் அஞ்சலி சுத்தமாய் விரும்பவுமில்லை; ரசிக்கவுமில்லை. ’அந்த இயக்குனர் தான் உங்களை பேட்டி எடுக்கச் சொன்னார் மேடம்” என்று யாராவது போன் போட்டால், ‘அவன் தான் சொல்லிவிட்டானா?’ என்று எரிந்து விழுந்து வேண்டா வெறுப்பாக பேட்டி கொடுத்தார் அஞ்சலி.
இந்தச் சூழலில், தெலுங்கு பட உலக அறிமுகமும் அங்கே தனக்குக் கிடைத்த ஹிட்டும் அஞ்சலிக்கு புதுத் தெம்பை தந்தது. எக்ஸ்ட்ரா போனஸாக நடிகர் வெங்கடேஷின் கரிசன பார்வையும் கிடைத்ததால் உற்சாகமானார் அஞ்சலி. ஆனால், அங்கேயும் போய் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்கள். தனக்கு பாதுகாப்புக் கொடுப்பார் என்கிற நம்பிக்கையில், தான் தினமும் முள் படுக் கையில் படுத்துப் புரளும் ரணத்தை வெங்கடேஷிடம் சொல்லி ஆறுதல் தேடி னார் அஞ்சலி. ’’உன்னை வைத்துத்தானே அவர்கள் ராஜ வாழ்க்கை வாழ் கிறார்கள். பணிந்து போக வேண்டியவர்கள் அவர்கள் தான். நீ எதற்காக பயப்பட வேண்டும்? இனி இந்தப் பிரச்னைகளை நான் பார்த்துக் கொள் கிறேன்” என்று தைரியம் கொடுத்தார் வெங்கடேஷ். இப்போது புரிகிறதா அஞ்சலி யாருடைய தைரியத்தில் பொங்கி வெடித்தார் என்று! அப்படியானால் வெங்கடேஷ் ஏன் இன்னும் ஸீனில் வராமல் இருக்கிறார்?
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்... எல்லாத்தையும் இன்னிக்கே சொல்லிட்டா எப்புடி!
|
|
அஞ்சலியின் மறுபக்கம் - மினி சினி தொடர் : பகுதி 4
|
தமிழக போலீஸும் ஆந்திர போலீஸும் ஆளுக்கொரு திக்கில் தேடிக் கொண்டிருந்த நிலை யில், தாமாக வந்து ஆஜராகி இருக்கிறார் நடிகை அஞ்சலி.''என்னை யாரும் கடத்தவில்லை. தாங்கமுடியாத மன அழுத்தம் காரணமாக நானே தான் வீட்டைவிட்டு வெளியேறினேன். மும்பையில் நண்பர்கள் பாதுகாப்பில் இருந்தேன். போலீஸ் எனக்கு பாதுகாப்பு தருவதாக சொன்னதால் நான் இங்கு வந்திருக்கிறேன். என் தரப்பு நியாயத்தை போலீஸ் துணை கமி ஷனர் சுதிர்பாபுவிடம் முழைமையாக சொல்லிவிட்டேன். தேவைப்பட்டால் விரைவில் மீடி யாக்களை சந்தித்து உண்மைகளைச் சொல்வேன்” என்று திடமாக சொல்லிவிட்டுப் போயி ருக்கிறார். அஞ்சலியின் தலை மறைவு வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பதால் இனி, அவரது திரைமறைவு வாழ்க்கை ஆரம்பமாகும்.
இனி, அஞ்சலியின் பறு பக்கம்...
இருபது வயதில் ஒரு இளம் பெண் நடிக்க வந்தால் அவருக்கு துணையாக அப்பாவோ, அம் மாவோ, அண்ணனோ வருவார்கள். அவர்கள் தான் அந்தப் பெண்ணுக்கு மெய்க்காப்பாளர் போல் இருப்பார்கள். அஞ்சலிக்கு துணையாக சித்தி, சித்தப்பா, அண்ணன் என மூன்று பேரும் வந்தார்கள். இதனால் இந்த மூன்று பேரும் எது சொன்னாலும் அதைக் கேட்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானர் அஞ்சலி. தொடக்கத்தில் இவர்கள் சொல்வதெல்லாம் நல்லதாகவே பட்டது அஞ்சலிக்கு. ஆனால், போகப் போக கசக்க ஆரம்பித்தது.
தன்னை முன்னுக்கு கொண்டு வந்தார்கள் என்பதற்காக தனக்கு ஒப்பாத விஷயங்களை எல் லாம் சகித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் அந்தப் பெண்ணுக்கு. அப்படியும் எத்தனை நாளைக்குத் தான் சகித்துக் கொள்ளமுடியும்? ஒரு கட்டத்தில் எதிர்க்கவும், மறுக்கவும் ஆரம்பித்தார் அஞ்சலி. அவரை பணம் காய்ச்சி மரமாக நினைத்துக் கொண்டிருந்தவர்களால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. கண்டிக்கிறோம் என்கிற பேரில் அஞ்சலிக்கு டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
பெற்றதாயைப் பிரிந்த ஏக்கம் அப்போதுதான் முதல் முறையாக அஞ்சலிக்கு வந்தது. எட்டா தூரத்தில் அம்மா இருந்ததால் தன்னுடைய கஷ்டங்களை உட்கார்ந்து சொல்லி அழக் கூட அவருக்கு ஆறுதலாய் ஒரு நிழல் இல்லை. இந்த ஏக்கமே அஞ்சலியை வெளிக்கிளம்ப வைத் தது. தன்மீது பரிவு காட்டிப் பேசிய நண்பர்கள் மற்றும் இயக்குனர்களோடு நிறையவே பொழுதை கழிக்க ஆரம்பித்தார். வீட்டிற்குள் இருந்த நெருக்கடிக்கு அது அவருக்கு ஆறுதல் தரும் மருந்தாக இருந்தது. வீட்டுக்குள்ளோ வேறு மாதிரியாய் பற்றி எரிந்தது. ’கண்டவர்களோடு சுற்றினால் இமேஜ் என்னாகும்?’ என்று தாவினார்கள்.
’எனக்கு சரி என பட்டதை நான் செய்கிறேன். நான் இன்னும் சின்னப் பெண் இல்லை உங் களுக்கு தேவை பணம் தானே அதற்கு எந்தக் குறையும் வராது. ஆனால், அதற்காக என்னை குத்திக் குத்தி அழ வைத்து ரசிக்காதீர்கள்” என்று குரலை உயர்த்தினார் அஞ்சலி. இப்படிப் பேசியதற்காக பலமுறை அஞ்சலி, வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். ’’சித்தப்பா தன்னை முடியைப் பிடித்து இழுத்து அடித்ததாக இப்போது அஞ்சலி சொல்வது உண்மையாக தான் இருக்க முடியும். ஏனென்றால், அந்தக் குடும்பத்தில் இருப்பவர்கள் எங்கள் கண் எதிரி லேயே அஞ்சலியை மிரட்டியதை நாங்கள் பார்த்திருக்கிறோம்” என்கிறார் ஒரு பிரபல சினிமா இயக்குனர்.
இத்தனையையும் போதாதென்று வேறுமாதிரியான சங்கடங்களையும் அஞ்சலி சந்திக்க நேர்ந் தது. நடிகர் விக்ரமின் அப்பா சினிமாவில் நடிக்க வந்து தோற்றுப் போனவர். அந்த வெறி யில்தான் அவர் தனது மகனை ஹீரோ ஆக்கினார். நடிகை மந்த்ராவின் அம்மா ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட். தன்னால் ஜெயிக்க முடியாததை மகள் மந்த்ராவை வைத்து ஜெயித்துக் காட்டினார், இன்றைக்கு திரை உலகில் பிரபலமாக இருப்பவர்களில் பலரது பின்னணி இப்படித்தான் இருக் கும். அஞ்சலியின் சித்தி பாரதி தேவியும் இந்த கேரட்க்டர் தான்.
எப்படியாவது கதாநாயகியாக நடித்துவிட வேண்டும் என்பதற்காக பூமணி படத்தில் நடிக்க சான்ஸ் கேட்டு இயக்குனர் களஞ்சியத்தைச் சந்தித்தார் பாரதி தேவி. களஞ்சியத்தை மடுமல்ல பல இளம் இயக்குனர்களை சந்தித்து அப்போது சான்ஸ் கேட்டடார். அத்தனை பேரும் இனிக்க இனிக்க பேசினார்கள். ஆனால், யாருமே வாய்ப்பு தரவில்லை. களஞ்சியம் மட்டும் பாரதி தேவிக்கு ஆறுதலாய் பேசினார். களஞ்சியத்தின் நம்பிக்கை வார்த்தைகள் பாரதிதேவிக்கு பிடித் திருந்தது.
அதேநேரம், தன்னால் சாதிக்க முடியாததை தன்னுடைய வளர்ப்பு மகள் அஞ்சலியை வைத்து சாதித்துக்காட்ட வேண்டும் என்ற வெறியை தனக்குளே வளர்த்துக் கொண்டார் பாரதி தேவி. அந்தவெறிதான் அஞ்சலியை கதாநாயகி அளவுக்கு உயர்த்தியது. தனக்காக வாய்ப்புக் கேட்டு அலைந்த காலங்களில் கனவுத் தொழிற்சாலையின் நெளிவு சுளிவுகளை நன்றாக தெரிந்து வைத்திருந்தார் பாரதி தேவி. வளர்ப்பு மகள் அஞ்சலியை ஜெயிக்க வைக்க அது அவருக்கு ரொம்பவே உதவியாக இருந்தது.இத்தனையும் செய்தது எதற்காக அஞ்சலிக்காகவா? இல்லை, அஞ்சலியால் வந்து கொட்டும் பணத்துக்காக. சினிமாவில் வந்த வருமானத்தை வைத்து, தானே படம் எடுக்க நினைத்தார் பாரதி தேவி. அதற்காக தனது இயக்குனர் தோழர்களிடம் கலந்து ரையாடல் நடத்தினார். சிக்கலே இங்குதான் ஆரம்பிக்கிறது.
சித்தி படம் எடுப்பது அஞ்சலிக்கு பிடிக்கவில்லை.அதை வெளிப்படையாகவே சொன்னார். இது சித்திக்கு பிடிக்கவில்லை. இருவரும் இப்படி முரண்பட்டதால் வீட்டுக்குள் பிரளயம் வெடித்தது. ’உன் பணம், என் பணம்” என்கிற அளவுக்கு வார்த்தைகள் தடித்தன. இதற்கு முந்தைய படங் களில் சில லகரங்கள் மட்டுமே அஞ்சலிக்கு சம்பளமாக தரப்பட்டது. அந்தப் பெண் முழுதாய் இருபது லட்சத்தை பார்த்ததே சேட்டை படத்தில் தான். ஆனால், அந்த வருமானத்தையும் சினிமா தயாரிப்பில் போட துடித்தார் பாரதி தேவி.
அதை அறிந்து அந்தப் பூவும் புயலானது ’இதுவரை சம்பாதித்ததை எல்லாம் உங்களுக்கே கொடுத்துவிட்டேன் இனியாவது எனக்காக சம்பாதிக்க நினைக்கிறேன்” - அஞ்சலியிடம் இருந்து இப்படி வார்த்தைகள் வந்து விழும் என்று அந்தக் குடும்பத்தில் யாரும் நினைத்திருக்க மாட் டார்கள். இப்படிச் சொல்வதால் தன்னுடைய எதிர்காலத்தையே பாழாக்கும் விதமாக காரியங் கள் நடக்கும் என்று அஞ்சலியும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
அதுசரி, சித்தி சொன்னதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருந்த அஞ்சலிக்கு, திடீரென இப்படிப் பேச தைரியம் கொடுத்தது யார்?
|
|
அஞ்சலியின் மறு பக்கம் - மினி சினி தொடர் : பகுதி 3
|
'ஹைதராபாத் ஓட்டலில் தங்கி இருந்த போது சித்தப்பா சூரிபாபு என்னை தலைமுடியை இழுத்து செருப்பால் அடித் தார். அதனால் தான் நான் ஓட்டலைவிட்டு வெளியேறினேன். எனது சகோதரர் உறுதுணையாக இருந்தால் நான் நேரில் வரத் தயார்" எங்கேயோ பாதுகாப்பான இடத்தில் பதுங்கி இருக்கும் அஞ்சலி அலைபேசி வழியாக அள்ளித் தெளித் திருக்கும் இந்த அக்னி வார்த்தைகள் சினிமா உலகத்தை உலுக்கி இருக்கிறது.
இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சித்தப்பா சூரிபாபு மயங்கி விழுந்து மருத்துவமனையில் அட்மிட் செய்யப் பட்டிருப்பதாக சொல்கிறார்கள். சித்திக்கும் இதனால் மன உளைச்சலாம். இதற்கிடையில், இன்னும் இரண்டு வாரத் திற்குள் அஞ்சலியை ஆஜர்படுத்தும்படி சென்னை உயர்நீதிமன்றம் ஆட்கொணர்வு மனுக்கு ஆர்டர் போட்டிருக்கிறது. இன்னொரு பக்கம், தன்னைப் பற்றி அஞ்சலி தெரிவித்த அவதூறு கருத்துக்களுக்காக மானநஷ்ட வழக்கு தொடர்ந் திருக்கிறார் இயக்குனர் களஞ்சியம். இத்தனைக்கும் நடுவில், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தோன்றி 'அஞ்சலி சீசன் டூ" விற்கான அடிக்கல் நாட்டுவிழாவுக்கு தயாராகி வருகிறார் அஞ்சலி.
இனி, அஞ்சலியின் மறுபக்கம்...
மாடலிங் போட்டோ ஷுட் செய்த ஆல்பத்தை தூக்கிக் கொண்டு சித்தியும் மகளும் பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினார்கள். அஞ்சலி எப்படியாவது சினிமா பிரபலமாகிவிட வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் அஞ்சலியைவிட பாரதி தேவிக்கு இருந்தது. அதற்காக லட்சங்களை கடனாக வாங்கிச் செலவு செய்தார். முயற்சி வீண் போகவில்லை.போட்டோ, பிரேமலேக ராசா என்ற இரண்டு தெலுங்கு பட வாய்ப்புகள் அஞ்சலி வீட்டுக் கதவை தட்டின.
ஆனால், பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பது போல இந்த இரண்டுமே பெரும் தோல்வியை சந்தித்தன. ஆனாலும், இரண்டு படங்களிலும் அஞ்சலியின் நடிப்பு சூப்பர் என்று திரை உலகம் பாராட்டியது. அந்த பாராட்டுப் பத்திரம் தான் 'கற்றது தமிழ்'' படத்தில் நடிக்கும் வாயப்பை அஞ்சலிக்கு தந்தது. 'கற்றது தமிழ்' படத்தில் அஞ்சலியின் நடிப்புககு அனைத்து தரப்பிலும் இருந்து பாரட்டுக்கள் குவிந்தன. 'நிஜமாத்தான் சொல்றியா?' என்று சோகத்தை அப்பிய முகத்துடன் அஞ்சலி பேசிய வசனம் அனைவரது மனதையும் கரைத்தது. அந்தப் பெண்ணுக்குள் இயல்பாகவே குடிகொண்டிருந்த சோகச் சுமை இந்த வசனத்திற்கு கூடுதல் மார்க் போட்டது.
ஆனாலும் என்ன செய்ய? வியாபார ரீதியாக 'கற்றது தமிழ்' தோற்றது தமிழாகிப் போனது. ஒரே ஒரு ஆறுதல், அஞ்சலி என்ற நடிகை வெளி உலகுக்கு தெரிய ஆரம்பித்தார். 2008 ஆம் ஆண்டு, இயக்குனர் சுந்தர்.சிக்கு ஜோடியாக 'ஆயுதம் செய்வோம்' படத்தில் நடித்தார். அதுவும் காகிதம் செய்வோம் என்றாகிப் போனது. ஆனாலும், தோல்விகளை பற்றிக் கவலைப் படாமல் ஓடிக் கொண்டே இருந்தார் அஞ்சலி. வெளிப்படையாக சொல்வதனால், குடும்பத்தில் அவருக்கு இருந்த நெருக்கடிகள் அவரை தூங்கவிடாமல் துரத்தின. இனி என்ன செய்ய என்று ஒரு இக்கட்டான சூழலில் இருந்த போது தான் 'அங்காடித்தெரு'.வுக்காக அஞ்சலியை அழைத்தார் இயக்குனர் வசந்தபாலன்.
அங்காடித்தெரு படத்திற்கு சேர்மக்கனி பாத்திரத்தில் நடிக்க நாயகியை தேடிக் கொண்டிருந்தார் இயக்குனர் வசந்த பாலன். கதையின் நாயகன் புதுமுகம் என்பதால், நாயகி பழகிய முகமாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்தார் வசந்தபாலன். அப்போது அவரது நினைவில் உதித்தவர் அஞ்சலி. தொட்டதிற்கெல்லாம் சென்டிமென்ட் பார்க்கும் சினிமா உலகம், இத்தனை சறுக்கலுக்குப் பிறகும் அஞ்சலிக்கு வாய்ப்புத் தந்திருக்கிறது என்றால் அதிசயமான ஆச்சரியம் தான்!
வசந்தபாலனை அஞ்சலியும் பாரதிதேவியும் சேர்ந்தே சென்று சந்தித்தார்கள். முதல் சந்திப்பிலேயே, அங்காடித் தெருவிற்காக செலக்ட் பண்ணி வைத்திருந்த காஸ்ட்யூம்களை அஞ்சலிக்கு கொடுத்து நடித்துக் காட்டச் சொன்னார் வசந்தபாலன. கலக்கினார் அஞ்சலி. பிறகு, கதாநாயகன் மகேஷையும் அஞ்சலியையும் ஒன்றாக வைத்து சில காட்சிகளை சொல்லிக் கொடுத்து நடிக்கச் சொன்னார்கள். அதிலும் அஞ்சலி அசத்தினார். கூச்சத்தால் மகேஷ் தயங்கினார். 'சார்.. இப்புடி கூச்சப்பட்ட சினிமாவில் பெரிய ஆளாகுறது எப்படி? இது வெறும் நடிப்புங்கிறத மொதல்ல மனசுல ஏத்திக்குங்க அப்பத்தான் நடிப்பு வரும்" என்று தள்ளி நின்ற மகேஷை தன்னருகே நிற்க வைத்து நடிப்புச் சொல்லிக் கொடுத்த அஞ்சலியை வியப்புடன் பார்த்தார் வசந்த பாலன்.
'அங்காடித்தெரு' ரியல் படப்பிடிப்பை தொடங்கினார்கள். முதல் மூன்று நாட்கள் படத்தின் முக்கிய காட்சியை படமாக் கினார்கள். அக்காட்சிகளில் அஞ்சலியின் நடிப்பை பார்த்து மெச்சிய வசந்தபாலன், 'கதைக்கு இப்பத்தாம்பா உயிர் வந்திருக்கு" என்று பாராட்டினார். மகேஷின் நடிப்பு சுமாராக இருந்த இடங்களை எல்லாம் அஞ்சலியின் நடிப்பு ஈடு செய்தது. மகேஷ் நடிக்க தயங்கிய நெருக்கமான காதல் காட்சிகளில் அவரது கூச்சத்தை போக்கியவர் அஞ்சலிதான். படப்பிடிப்பு இடைவெளியில் மகேஷிடம் பேசி பேசி கூச்சத்தை போக்கிய அஞ்சலி, படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
படப்பிடிப்புகள் முடிந்தபோது, 'ஓர் இயக்குனரின் கதாநாயகி' என்று வசந்தபாலனிடம் பாராட்டை பெற்றார் அஞ்சலி. படமும் வெளிவந்து சக்கைப்போடு போட்டது. தனது அபார நடிப்பால் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார் அஞ்சலி. 'கற்றது தமிழ்' படத்துக்கு, ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்படும் விஜய் டிவியின் சிறந்த புதுமுக நடிகை விரு தையும், 'அங்காடி தெரு' படத்துக்காக சிறந்த நடிகை விருதையும் வென்றார். ரசிகர்களை தனது நடிப்பாற்றலால் வசீகரித்திருக்கிறார் என்பதற்கு இந்த விருதுகளே சான்று. அதனைத் தொடர்ந்து அஞ்சலி நடித்த படங்களான 'ரெட்டை சுழி', 'மகிழ்ச்சி', 'தூங்கா நகரம்', 'கருங்காலி', 'மகராஜா', 'வத்திக்குசி', ஆகிய படங்கள் தோல்வியை சுமந்தன. இப்போது வெளிவந்திருக்கும் சேட்டையும் செயலிழந்து நிற்கிறது.
இடையே சில படங்களில் சிறு வேடங்களிலும் நடித்தார் அஞ்சலி. 'கற்றது தமிழ்', 'அங்காடித்தெரு' போன்று அஞ் சலிக்கு பெரிய அளவில் பாராட்டு குவித்த படம் 'எங்கேயும் எப்போதும்'. இந்தப் படத்தில் தனது எதார்த்தமான நடிப் பால் திரையுலகை மீண்டும் திரும்பிப் பார்க்க வைத்தார். 'எங்கேயும் எப்போதும்' படத்துக்கும் விருது கிடைத்தது. பல படங்களில் நடித்து வந்தாலும், அவ்வப்போது பாரதிதேவி, களஞ்சியத்தை சந்தித்து "அஞ்சலி அடுத்ததாக ஜீவாவுடன் நடிக்கிறார், இந்தக் கதையில் நடிக்க இருக்கிறார், அந்தக் கதை அஞ்சலிக்கு பொருத்தமாக இருக்குமா?" என்று எல்லாம் தனி ரூட்டில் போய் ஆலோசனைகளை கேட்டுக் கொண்டே இருந்தார்.
தமிழில் பிஸியாக இருந்த சமயத்தில், தெலுங்கிலும் அஞ்சலிக்கு அடித்தது ஒரு லக். மகேஷ்பாபு, வெங்கடேஷ், சமந்தாவுடன் இணைந்து 'சீத்தாம்மா வாகித்லோ ஸ்ரீமல்லே சேத்து' என்ற தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படமும் வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் ரவிதேஜாவுடன் 'பலுப்பு', மீண்டும் வெங்கடேஷுடன் இணைந்து ஹிந்தி ரிமேக் படமான 'போல் பச்சன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அஞ்சலி. பலுப்பு படப்பிடிப்பு முடிவுற்றது. போல் பச்சன் படப்பிடிப்பு போய்க்கொண்டு இருக்கிறது. இதற்காக ஹைதராபாத் சென்றபோதுதான் அஞ்சலி தலைமறைவாகி விட்டார்.
ஹைதராபாத்தில் இருந்து சென்னையில் உள்ள நிருபர் ஒருவரை தொடர்பு கொண்டு, "பாரதிதேவி என்னுடைய அம்மா அல்ல... சித்தி. இயக்குனர் களஞ்சியத்துடன் சேர்ந்து கொண்டு என்னை சித்தி கொடுமைப்படுத்துகிறார். நான் சினி மாவில் இதுவரை சம்பாதித்த பணம் அனைத்தையும் அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். எனக்கென்று எதுவும் இல்லை. இனிமேல் தான் என் தேவைக்கு பணம் சம்பாதிக்க வேண்டும்" என்று அஞ்சலி சொன்னதாக சொல்கிறார்கள். அதன் பிறகுதான் அஞ்சலி தலைப்புச் செய்திகளுக்கு தீனியாய் வந்தார். இயக்குனர் களஞ்சியம், "எனக்கு இதில் எந்த சம்பந்த மும் இல்லை. இது எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி" என்கிறார்.
களஞ்சியம், பாரதிதேவி இருவருமே சொல்லும் இன்னொரு அதிர்ச்சி தகவல், "அஞ்சலிக்கு ஒரு நோய் இருக்கு. அதற் காக தினமும் அவர் மாத்திரை சாப்பிட வேண்டும். மாத்திரை சாப்பிடாவிட்டால் சிக்கல் வரும். அவரது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இதற்கு மேல் விளக்கம் சொல்லமுடியாமல் இருக்கிறோம்" என்று சொல்கிறார்கள் அவர்கள். ''ஒரு சினிமா நடிகை மீது எத்தகையை வதந்தியை பரப்பினால் அவரது எதிர்காலம் பாதிக்குமோ அப்படியொரு அவதூறை பரப்பி, அந்த அப்பாவிப் பெண்ணின் எதிர்காலத்தை சீரழிக்கப் பார்க்கிறார்கள். அஞ்சலிக்கு அப்படி ஒன்றும் சீரியஸான நோய் எதுவும் இல்லை" என்று பதறுகிறார்கள் அஞ்சலியை நன்கு தெரிந்தவர்கள்.
அஞ்சலி மற்றும் அவருக்கு எதிரான நம்பத்தகுந்த தரப்பினர்களுடன் பேசியதில் இருந்து கிடைத்த தெளிவான ஒரே விஷயம், 'நட்சத்திரம்' தமிழ்த் திரைப்படத்தின் ஸ்ரீபிரியா கதாபாத்திரத்தின் நிஜம்தான் அஞ்சலி!
அந்த நிஜத்தை மிரட்டும் நிழல் எது?
பொறுத்திருங்கள்...
|
|
அஞ்சலியின் மறுபக்கம் - மினி சினி தொடர்: பகுதி 2
|
கத்தாரில் இருக்கும் தனது அம்மாவிடம் அஞ்சலி போனில் பேசினார். அதனால், அவர் பத்திரமாக இருப்பதாக சொல்லி புகாரை வாபஸ் வாங்க முயற்சித்தார் அஞ்சலியின் அண்ணன் ரவிசங்கர். அஞ்சலியை ஆஜர்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருக்கிறார் அவரது சித்தி பாரதி தேவி. ''குடும்பச் சூழ்நிலை காரணமாக வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறேன். இன்னும் இரண்டு நாளில் துணிச்சலுடன் வெளியில் வருவேன்" என்று போனில் பேசி இருக்கிறார் அஞ்சலி. மணிக்கு ஒரு தரம் அலாரம் அடித்துக் கொண்டே இருக்கிறது அஞ்சலியை பற்றிய செய்திகள்.
இனி அஞ்சலியின் மறுபக்கம் ...
'சத்தமின்றி முத்தமிடு' படத்தின் நாயகியாக அஞ்சலியை தேர்வு செய்தவுடன், படத்திற்கான காஸ்ட்யூம்ஸ் எல்லாம் கொடுத்து நடித்துக் காட்டச் சொல்லி இருக்கிறார்கள். அஞ்சலியின் முதல் நடிப்பு குறித்து கேட்டதற்கு "தொடக்கத்தில் அந்தப் பொண்ணுக்கு நடிக்கவே தெரியலைன்னு தான் சொல்வேன். ஒரு நடிகைக்கான நளினத்தோடு நடக்கக் கூட தெரியவில்லை. அதைக் கூட நாங்கள் தான் சொல்லிக் கொடுக்க வேண்டி இருந்தது. அவரது நடை, பாவணைகள் எல்லாமே வித்தியாசமாக இருந்தது. சுருக்கமா சொல்லணும்னா, குக்கிராமத்துலருந்து வந்ததால கனவு தொழிற்சா லையின் அங்க அசைவுகள் எதுவுமே தெரியாமல் தான் இருந்தார் அஞ்சலி" என்கிறார் இயக்குனர் களஞ்சியம்.
இத்தனை குறைகள் இருந்தாலும் அஞ்சலியை ஒதுக்கிவிட மனமில்லாத களஞ்சியம், 'சத்தமின்றி முத்தமிடு' படத்தின் இணை இயக்குனர் பரத்திடம் கதாநாயகன் மயூருக்கும், அஞ்சலிக்கும் நடிப்பை கற்றுக் கொடுக்கும் பொறுப்பை ஒப்ப டைத்தார். நடிப்பு வராத போதும் அஞ்சலி மீது அவர் காட்டிய கனிவிற்கு காரணமே அஞ்சலி முகத்தில் நிரந்தரமாக குடியேறி இருந்த ஒரு சோகம்.
இருவரும் தினமும் அஞ்சலிக்கு நடிப்பு பயிற்சி தந்தார்கள். காலை 10 முதல் மதியம் 1 மணிவரை டிரெயினிங் கொடுத் துக் கொடுத்து அஞ்சலியை செதுக்கினார்கள். வாரம் ஒரு காட்சியை நடிக்க வைத்து, அதை களஞ்சியத்திற்கு போட்டுக் காட்டினார் இணை இயக்குனர் பரத்.களஞ்சியத்தை மறந்தாலும் ஒளிப்பதிவாளர் கே.வி.மணியையும் இணை இயக் குனர் பரத்தையும் அஞ்சலியால் மறக்கவே முடியாது. இவர்கள் தானே அஞ்சலியை அரிதார மேடை ஏற்றுவதற்காக அரும்பாடுபட்டவர்கள்.
ஆறு மாத காலம் நடிப்பு பயிற்சி கொடுத்த பிறகும் கூட அஞ்சலியை கேமரா முன்பாக நிற்க வைக்க தயங்கிய படக் குழு, அவரது நடிப்பில் ஒரு டெலிஃபிலிம் ஒன்றை உருவாக்கியது. அந்த ஒருமணி நேர படம் தான் அஞ்சலிக்கு முதல் படம். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரின் தோற்ற சரித்திரத்தை டெலி ஃபிலிமாக 'ஆதி அருணாச்சலம்' என்ற பெயரில் களஞ்சியத்தின் நண்பர் எல்.சீனிவாசன் உருவாக்கினார். அதில் திலோத்தமை பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை அஞ்சலிக்கு தந்தார்கள். யாரும் எதிர்பாராத விதத்தில், திலோத்தமை பாத்திரத்தில் நேர்த்தியாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். இதற்கு பிறகு தான், 'சத்தமின்றி முத்தமிடு' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஓப்பனிங் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், ஃபினிஷிங் சரியில்லாமல் போனது. அமர்க்களமாய் முத்தமிட கிளம்பி யவர்கள் நிதிப்பற்றாக்குறையால் பாதி வழியில் படுத்துக் கொண்டார்கள். வேறு சில நெருக்கடிகளும் தன்னைச் சுழற்றி அடித்ததால் களஞ்சியத்தால் சத்தமினிறி முத்தமிட முடியவில்லை. பாதி முடிந்த நிலையில் படம் பெட்டிக்குள் முடங்கிக் கொண்டது.
ஆனாலும், அஞ்சலிக்கு சினிமாவில் நடித்து தனது குடும்பத்தின் பொருளாதார சூழலை சமாளிக்க வேண்டிய கட் டாயம். அதனால், களஞ்சியத்திற்காக காத்திருக்காமல், சித்தியும் மகளும் நேரடியாகவே களத்தில் இறங்கி சினிமா வாய்ப்புகளை தேட ஆரம்பித்தார்கள். சினிமா வாய்ப்புகள் மட்டுமில்லாமல், மாடலிங் துறை புகைப்படக்காரர்களை வைத்து, கையில் மடியில் இருந்ததை எல்லாம் செலவு செய்து போட்டோ ஷூட் எல்லாம் எடுத்தார்கள். திரைத் துறைக்குள் அடியெடுத்து வைக்கும் ஒரு பெண் சந்திக்க வேண்டிய இன்னல்களும் இடைஞ்சல்களும் அஞ்சலிக் காகவும் சேர் போட்டு காத்திருந்தது. அத்தனையும் தாண்டி கலர்ஃபுல் கதாநாயகியாகி ஜொலித்தார் அஞ்சலி.
அது எப்படி சாத்தியமானது?
|
நடிகை அஞ்சலியின் மறுபக்கம் - ஒரு மினி சினி தொடர்
|
திடீர் சினிமாவே எடுக்கலாம் போலிருக்கிறது. அந்தளவுக்கு திகில் திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது நடிகை அஞ்சலியின் சமீபத்திய நாட்கள். அஞ்சலி எங்கேயோ ரகசிய இடத்தில் பதுங்கி விட்டதால் அவரது ரகசியங்கள் ஊர்சுற்றக் கிளம்பிவிட்டன!
இணைய தளங்கள், தினசரிகள், சேனல்கள் எதைத் திருப்பினாலும் அஞ்சலி புராணம் தான் பாடுகின்றன. அஞ்சலி தலை மறைவு, ரகசிய காதலனுடன் ஓட்டம், இயக்குனர் களஞ்சியம் மற்றும் சித்தி பாரதிதேவி மீது சராமாரி புகார் என அஞ்சலியைப பற்றிய செய்திகள் புதிது புதிதாய் முளைத்துக் கொண்டே இருக்கின்றன.
அஞ்சலியின் கடந்த காலமும் கரடுமுரடானதுதான். ஆந்திராவில் உள்ள ஜகன்னபேட்டா என்ற குக்கிராமத்தில் பிறந்த அஞ்சலிக்கு பெற்றோர் வைத்த பெயர் பால திரிபுர சுந்தரி. அம்மா பார்வதி தேவி. இதுமட்டும் தான் இப்போதைக்கு தெரிகிறது. பெரிய பின்னணி எதுவும் இல்லாததால் ஏழ்மையை சுமந்தே இருந்தது அஞ்சலியின் குடும்பம்
பார்வதிதேவிக்கு இரண்டுமே பெண் குழந்தைகள். தங்கையான பாரதிதேவிக்கு இரண்டுமே ஆண் குழந்தைகள். பாரதிதேவிக்கோ பெண் குழந்தை என்றால் கொள்ளை பிரியம். அதனால், தனது அக்கா மகள் திரிபுர சுந்தரியை ( முழு பெயரையும் சொன்னா மூச்சு வாங்குதுங்க) முறைப்படி தத்து எடுத்து வளர்த்திருக்கிறார்.
சிறுவயதிலேயே திரிபுர சுந்தரிக்கு நடிப்பில் ஆர்வம் அதிகம். எப்படியும் சினிமா நடிகை ஆகியே தீருவேன் என்று சொல்லி வாய்ப்புகளை தேடி அலைய ஆரம்பித்தார். ' நீயெல்லாம் நடிக்கப் போறியாக்கும்' என்று ஏளனம் செய்தது சுற்றமும் நட்பும். அதை எல்லாம் பொருட்படுத்தாமல் வாய்ப்புக்காக காத்திருந்தார் திரிபுர சுந்தரி. அப்போது தான் டைரக்டர் களஞ்சியத்தின் கலைக் கண்ணில் சிக்கினார். 'மிட்டாமிராசு' படத்தை முடித்திருந்த களஞ்சியம், அடுத்ததாக அரசியல் பின்னணி கொண்ட ஒரு காதல் கதையை திரைச்சித்திரமாக்கும் முயற்சியில் இறங்கினார்.
புதுப்படத்திற்கு, 'சத்தமின்றி முத்தமிடு' என்று தலைப்பும் வைத்தார். தேவயானியின் மூத்த தம்பி மயூர் தான் கதைக்கு நாயகன். இவருக்கு பொருத்தமான ஜோடியாக 18 வயது இளம் பெண்ணை தேடினார் களஞ்சியம். எத்தனையோ பேர் வந்தார்கள். அத்தனை பேரையும் சுட்டுவிரலில் தள்ளிவிட்ட களஞ்சியம், 'தமிழ் பொண்ணு சாயல் இருந்தா நல்லா இருக்குமே" என்று தனது விருப்பத்தை அழுத்தமாக சொன்னார். அதன் பிறகும் நிறைய பெண்களை வரவழைத்து மேக்கப் டெஸ்ட், ஆடியேசன் என சல்லடை போட்டு அலசினார்கள். அப்போது சிக்கிய மின்மினி தான் திரிபுர சுந்தரி.
பாரதிராஜா தனது படங்களுக்கு கிராமத்து குயில்களை தேடும்போது எல்லாம், அவருக்கு துணையாக இருந்தவர் அவரது ஆஸ்தான போட்டோகிராபர் ஒளிப்பதிவாளர் கே.வி. மணி. பாரதிராஜாவிடம் இருந்தவர் என்பதால், களஞ்சியம் தமது படத்தின் நாயகி தேர்வுகளிலும் கே.வி.மணியை பக்கத்தில் வைத்துக் கொண்டார். கே.வி.மணிதான் 'சத்தமின்றி முத்தமிடு படத்தின் நாயகி தேர்வில் திரிபுர சுந்தரியை களஞ்சியத்திற்கு க்ளிக் செய்து கொடுத்தவர்.'இந்தப் பெண்ணுக்குள் ஒரு சோகம் இருக்கிறது. இந்த மாதிரி ஒரு பெண்ணைத் தான் பாரதிராஜா ரொம்ப காலமா தேடிக்கிட்டு இருக்காரு. இவ தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோயினா வருவா. இவள மிஸ் பண்ணாதீங்க சார்" என்று அஞ்சலிக்கு இன்ட்ரோ கொடுத்தவர், 'இவளுக்கு சின்னதா ஒரு குறையும் இருக்கு.. லேசா மாறுகண்ணு. கேமிரா ஆங்கிள் மூலமா அதை சரி பண்ணிக்கலாம் " என்றும் சொன்னார்.
அவர் இப்படிச் சொன்னதால், தான் ஏற்கெனவே செலக்ட் செய்து வைத்திருந்த பெண்ணை ரிஜக்ட் சொல்லிவிட்டு. திரிபுர சுந்தரியை 'சத்தமின்றி முத்தமிடு' படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தார் களஞ்சியம். அரை கிலோ மீட்டருக்கு பெயர் வைத்திருந்தால் சினிமாவில் ஜெயிக்க முடியாதே! அதனால், பால திரிபுர சுந்தரியை சுருக்கி, திரிபுரா அல்லது சுந்தரி என பெயரை மாற்றிவிடலாம் என படக்குழு தீர்மானித்தது.
இதுபற்றி வளர்ப்புத்தாய் என்று சொல்லப்படும் பாரதி தேவியிடமும் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். ஆனால், ரெண்டு பெயர்களையுமே களஞ்சியம் ரசிக்கவில்லை. 'ஆங்கிலத்தில் முதல் எழுத்தான 'ஏ" யில் பெயரின் முதல் எழுத்து இருந்தால் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்" என்று சொன்னார் களஞ்சியம். அப்படி பிறந்தவர் தான் அஞ்சலி.
பெயர் மாற்றம் திரிபுர சுந்தரிக்கும் பிடித்திருந்தது. உற்சாகமாய் படத்தில் நடித்தார். களஞ்சியத்திற்கு பிடித்த கதாநாயகியாக கலக்கினார். ஆனாலும் , சில சிக்கல்கள் வந்தன. 'சத்தமின்றி முத்தமிடு" படத்திற்காக அஞ்சலி பட்ட கஷ்டங்கள் என்ன... அப்படி கஷ்டப்பட்டும் அந்தப் படம் ஏன் வெளிவரவில்லை?
|
|
|
|
|
|
|
|
|
|